விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்சேவூரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரேம்குமார்(35). தனது குடும்பத்தாருடன் சென்னை பிராட்வே பகுதியில் வசித்த அவர், கடந்த ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி கீழ்சேவூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக பிரம்மதேசம் காவல் துறையினர் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பிரேம் குமார் மற்றும் அவரது தாய் லட்சுமி(55), ஆகிய இருவரையும் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
விசாரணையில் சென்னை பிராட்வேயில் பிரேம்குமாருக்கு சொந்தமான காய்கறி கடை இருந்தது. இதனை சென்னை புளியந்தோப்பில் வசித்து வரும் கீழூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் ராமதாஸ் (45), என்பவரிடம் விற்றுத் தரும்படி பிரேம் குமார் கூறியுள்ளார். அந்த கடையை ராமதாஸ் 27 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். விற்பனை செய்த பணத்தில் 17 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். மேலும் அந்தப் பணத்தில் 7 லட்சம் ரூபாய் கடனாகவும் பெற்றுள்ளார்.
பல நாள்களாக ராமதாஸ் பணத்தை திருப்பித் தராததால் பிரேம் குமார் மற்றும் அவரது தாய் லட்சுமி ஆகியோர் ராமதாஸிடம் தொடர்ந்து பணத்தை கேட்டு வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆறாம் தேதி அவரது நண்பர்களான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரங்கசாமி மகன் ராஜி (எ) ராஜன்(32), சென்னை புளியந்தோப்பை சேர்ந்த சந்திரன் மகன் தமிழ்ச்செல்வன் (43), ஆகியோருடன் பணத்தை திருப்பித் தருவதாக கூறி கீழ்சேவூர் கிராமத்திற்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது கீழ் சேவூர் கிராமத்தில் பிரேம் குமாருக்கு அதிகளவில் மது ஊற்றிக்கொடுத்து மதுபோதையில் விவசாய கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர். மறுநாள் பிரேம் குமாரின் தாய் லட்சுமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்கள் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். திருவண்ணாமலையில் திருமணம் செய்துகொள்வதற்காக அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார். ஆகையால் தங்களை அழைத்து வரும்படி கூறினார் என நாடகமாடி, தாய் லட்சுமியை காரில் திருவண்ணாமலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது செல்லும் வழியில் ஆரணி பகுதியில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் செல்ஃபோன் சிக்னலை ஆய்வு செய்ததில் கொலை குற்றவாளிகள் பிடிபட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் கீழ்சேவூர் கிராமத்தில் பிரேம் குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜி என்கின்ற ராஜன் என்பவரை பிரம்மதேசம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டிவனம் பகுதியில் தற்கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது தாய், மகன் இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:திண்டுக்கல் தொழிலதிபர் கொலை வழக்கு: 7 பேர் கைது