விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் கலிவரதன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். இந்நிலையில் நேற்று (மார்ச் 26) திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சி. மெய்யூர் என்ற ஊராட்சியில் வாக்குச் சேகரித்தார்.
அப்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை ஒருமையிலும், தனக்கு டாக்டர் ராமதாஸ் துரோகம் செய்ததால் அந்தக் கட்சியைவிட்டு வெளியே வந்ததாகக் கூறி வாக்குச் சேகரித்தார். இதனைக் கேட்ட பாமகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 27) திருக்கோவில் தொகுதிக்குள்பட்ட மணம்பூண்டியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை ஒருமையில் பேசியதற்கும் துரோகம் செய்ததாகக் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.