அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலம் சோனபத்ரா பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கலவரம் வெடித்தது. அப்போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர்.
இந்நிலையில் காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று சோனபத்ராவுக்குச் சென்றார்.
ஆனால், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால், பிரியங்கா காந்தியை காவல் துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. உடனே அவர் திடீரென சாலையின் நடுவே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
காவல் துறையினரின் இந்தச் செயலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் விக்கிரவாண்டி பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஆர்.டி. ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.