விழுப்புரம் கணபதி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, பண்ருட்டி, விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 நபர்களுக்கு மேற்பட்டோரை நியமித்து அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீதர் மீது விழுப்புரம், கண்டமங்கலம் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல் துறையினர் நேற்று (ஜூன் 18) வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விழுப்புரம்-காட்பாடி தண்டவாளம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஸ்ரீதரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் இரண்டு வருடங்களாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.