விழுப்புரம் : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள்கள் எடுத்துச் செல்லக் கூடாது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், பரிசு பொருள் கொடுக்க தடை போன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில், பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த நல்லாவூர் பகுதியில் நேற்று (மார்ச் 5) பறக்கும் படையைச் சேர்ந்த கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,
கடலூரை அடுத்த கிளிஞ்சல் குப்பத்தில் இருந்து வானூரை நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதனை ஓட்டிவந்த சிவலிங்கம் விசாரித்தபோது, அவரிடம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாகனத்தை ஓட்டிவந்த சிவலிங்கம் என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பைனான்ஸ் விடுவதற்காக அந்த தொகை கொண்டு செல்லப்பட்டதாக கூறியுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வானூர் வட்டாட்சியர் அலுவலக கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க : பறக்கும் படை ஹீரோயிசம்: சிக்கினர் அரிசி கடத்தல் காரர்கள்!