விழுப்புரம்: மரக்காணம் அடுத்த சிறுவாடி கிராமத்தில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, “50 ஆண்டுகால அதிமுக அரசியல் வரலாற்றில், 30 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது. இதுவே அதிமுக ஆட்சியின் பெருமை.
எங்களுக்காக வாக்களித்தால், ‘உங்களுக்கு இரண்டு மனைவி இலவசம்’ என திமுகவினர் ஆட்சிக்கு வர என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். திமுக ஆட்சியில் உங்கள் சொத்து, உங்களுக்குச் சொந்தமாக இருக்காது. உங்கள் வீடும் உங்களுக்கு சொந்தமாக இருக்காது. உங்கள் மனைவி கூட உங்களுக்குச் சொந்தமாக இருக்க மாட்டார்கள்.
சேலத்தில் காவல் அலுவலர் ஒருவர் குடும்பத்தை அடியோடு அழித்துள்ளது திமுக. அக்கட்சி நிர்வாகியான சுரேஷ் என்பவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வலது கை. இவர் காவல் அலுவலர் ஒருவரது குடும்பத்தையே அடியோடு வெட்டிக் கொன்று அழித்தார்.
திமுகவின் ஆட்சி காலத்தில், பாளையங்கோட்டையில் காவல் ஆய்வாளர் ஒருவரை நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்தனர். அவர் கடைசி நேரத்தில் தண்ணீர் கேட்டு துடிதுடித்து இறந்தார். இதுவே திமுகவின் ஆட்சியின் சிறப்புகள். எனவே உங்களுக்கு அராஜக ஆட்சி வேண்டுமா? மக்களாட்சி வேண்டுமா? என மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்” என பேசினார்.
மேலும், மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் இங்கு கூடியிருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறியவர், வருகைதந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துச் சென்றார்.