நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (நவம்பர் 23) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டு, அனைத்துத் துறை சார்பில் எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம்., "நிவர் புயல் தொடர்பாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. அறிக்கை மன்னன் மு.க. ஸ்டாலினின் 'கண்ணாடியை பார்த்து கரடி பொம்மை என்ன விலை' என்று கேட்கும் உவமைகள் எல்லாம் அவருக்குத்தான் பொருந்தும்.
அதிமுக, பாஜகவில் குடும்ப அரசியல் என்பதே இல்லை. திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பரம்பரை குடும்ப அரசியலில் ஈடுபட்டுவருகின்றனர்.
மு.க. ஸ்டாலின் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் கரடி பொம்மை மட்டுமல்ல, காட்டெருமை உள்ளிட்ட அனைத்து வன விலங்குகளும் தெரியும். மறைந்த கருணாநிதி திமுகவுக்காக பாடுபட்டவர்; பேச்சாற்றல் உடையவர். ஆனால், அவரது வாரிசுகளுக்கு பணம் கொள்ளை அடிப்பது தவிர வேறு எதுவும் தெரியாது.
ஊழல் பற்றி பேச திமுகவினருக்கு அருகதை இல்லை. உலகிலேயே மாபெரும் 2ஜி ஊழல் செய்தவர்கள் திமுகவினர். 10 ஆண்டுகால திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. இலங்கையில் தமிழர் படுகொலைக்கு துணைபோனவர் கருணாநிதி.
பாஜக ஆட்சியில் தமிழ்நாடு மீனவர்கள் சுதந்திரமாக உள்ளனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதில் திமுகவுக்கு என்ன பிரச்சனை? தயாளு அம்மாள் மீது சிபிஐ விசாரணை நடத்திய அதே நேரத்தில் காங்கிரசுடன் கூட்டணி பேரம் பேசியவர்கள் திமுகவினர்.
அண்ணாவால் தொடங்கப்பட்டு, கருணாநிதியால் திமுக இயக்கம் வழிநடத்தப்பட்டது. ஆனால், இன்று திமுக தொடங்கப்பட்டபோது பிறக்காத உதயநிதி ஸ்டாலின் காலைப் பிடித்தால்தான் கட்சியில் பதவிபெற முடியும் என்ற நிலை உள்ளது" என்றார்.