தமிழ்நாடு உள்பட, கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் வருகிற 31ஆம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கினால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கி பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள், வேலையிழந்து, வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் கடந்த சில தினங்களாக புலம்பெயர் தொழிலாளர்களை ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மந்தகரை பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நகைத் தொழிலாளர்கள், தாங்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், தாங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் வந்தடைந்ததாகவும், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா ஊரடங்கால் வேலை இழந்து, வருமானம் இன்றி, ஒருவேளை உணவு மட்டுமே உண்டு வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
தொடர்ந்து, தாங்கள் சொந்த ஊர் திரும்ப மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 70 ஆண்டு பழமைவாய்ந்த கோயில் இடிப்பு: பக்தர்கள் வேதனை