விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்குள்பட்டது நல்லூர் கிராமம். இங்குள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் உள்ள சாலை முற்றிலும் சிதிலம் அடைந்து தற்போது மணல் பாதைபோல் காட்சியளிக்கிறது.
இதனால் அப்பகுதிக்கு அவசரத்திற்குக்கூட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அப்பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குப் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை அந்த இடத்தில் எந்தச் சாலையும் அமைக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், மரக்காணத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அலுவலர்கள் உடனடியாக சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க... ‘காவல் துறையினர் பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசக்கூடாது’ - சிறப்பு டிஜிபி உத்தரவு!