விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம் (எ) அருணாச்சலம் (18). 12ஆம் வகுப்பு முடித்து வீட்டில் இருக்கும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த அபிநயா (16) எனும் பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஓராண்டாக காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இருவரும் அண்ணன்-தங்கை உறவு என்பதால் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு அருணாச்சலமும், அபிநயாவும் வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து பெற்றோர் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், திண்டிவனம் அடுத்த கருணாவூர் பகுதியில் புளியமரம் ஒன்றில் இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள் இருவரின் சடலத்தையும் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன அருணாச்சலம், அபிநயா இருவரின் உடலிலும் ரத்தக் காயங்கள் இருப்பதால், உறவினர்களால் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பார்களா என்ற கோணத்திலும், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.