விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விமல் (23). இவரும் சேலம் மாவட்டம் சின்னசீரகம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கீர்த்திகா (21) என்ற பெண்ணும், புதுவை மாநிலம் கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த போது கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த 11ஆம் தேதி வளவனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் கீர்த்திகாவை கடத்தியதாக பெண்ணின் தந்தை தம்பு, சேலம் மாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து கீர்த்திகாவின் உறவினர்கள் இன்று விழுப்புரம் வந்து, காவல் துறையின் ஒத்துழைப்புடன் காதல் ஜோடியை தாக்கி அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
பின்னர் காவல் துறையினர் காரில் இருந்த காதல் ஜோடியை விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது வரும் வழியில் இருவரையும் பெண்ணின் மாமா தாக்குவார் என்பதால், காதல் ஜோடிகள் வரமறுத்து கதறி அழுதனர்.
இதனால் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், இருவரையும் அழைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறையினர் விசாரணை செய்தனர். இருவரும் பதிவுத் திருமணம் செய்து இருந்ததால், பெண் வீட்டாரிடம், காவல் துறையினர் அனுப்ப முடியாது என்று கூறி, காதல் ஜோடியை மாப்பிள்ளை வீட்டாரிடம் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:
சத்துணவு ஊழியர்கள் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!