மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். லாரி ஓட்டுநரான இவர் தனக்கு சொந்தமான மினி லாரியில் மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு ஹைட்ராலிக் மிஷன் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பனையபுரம் நான்கு முனை சந்திப்பில் வந்து கொண்டிருந்த போது தூக்கம் தாளாமல், மினி லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு கண் அயர்ந்து தூங்கியுள்ளார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சஞ்சீவ் குமாரை பலத்த ஆயுதங்களால் தாக்கிவிட்டு, லாரியைக் கடத்திச் சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த சஞ்சீவ்குமார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சஞ்சீவ்குமார் இதுதொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புதுச்சேரி அருகேயுள்ள பி.எஸ். பாளையம் பகுதியில் லாரி இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து லாரியை மீட்ட காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர். வடமாநில ஓட்டுநரைத் தாக்கி மினிலாரியைக் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உடனுக்குடன்: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகள்