விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் வசிக்கும் விவசாய பொதுமக்கள் கால்நடைகள் வளர்க்கும் தொழிலையே முதன்மை தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மர்ம நோய் தாக்கத்தின் காரணமாக கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன.
மேலும் கடந்த 7 நாள்களில் மட்டும் சுமார் 31 மாடுகள், 170 ஆடுகள் உயிரிழந்துள்ளன. குறிப்பாக ஆடுகள் அனைத்தும் வயிறு வீக்கமடைந்து உயிரிழந்ததாகவும், மாடுகள் கால்கள் வீங்கி நடக்க முடியாத நிலை ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி இறந்ததாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இங்கு, கால்நடை மருத்துவமனையானது வெகு தொலைவில் உள்ளதால், கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு முறையான மருத்துவ வசதி கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள முருக்கேரி கால்நடை மருத்துவமனை அழைத்துச் சென்றால், உங்கள் பகுதிக்கு மரக்காணம் கால்நடை மருத்துவமனை தான் அங்கு செல்லுங்கள் என்று அனுப்பிவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே இவர்கள் தனியார் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து மருத்துவம் பார்க்கின்றனர். ஆனால் தனியார் கால்நடை மருத்துவர்கள் ஒரு மாட்டிற்கு 300 முதல் 400 ரூபாய் வரை கேட்பதால், அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவ வசதி செய்ய முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
ஆகையால் தங்கள் பகுதிக்கு உடனே ஒரு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து தந்து, மீதமுள்ள கால்நடைகளையாவது காப்பாற்றி தருமாறு தமிழ்நாடு அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாயில்லா ஜீவன்கள் மர்ம நோயால் உயிரிழக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆனை கட்டிப் போரடிக்கும் சங்க காலக் காட்சியை மீண்டும் உயிர்ப்பித்த மதுரை மைந்தர்: வைரல் வீடியோ