கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்காவிற்குட்பட்ட கிழக்குமருதூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் அப்பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர்மழை காரணமாக கிராமம் முழுவதும் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகி உளுந்தூர்பேட்டை, முண்டியம்பாக்கம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்தப் போராட்டத்தை தொடர்ந்தும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.