தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வினை தமிழ்நாடு சுகாதார முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மேற்கொண்டுவருகிறார். இதன்படி நேற்று (டிச. 17) விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுசெய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கடந்த ஆண்டைவிட காய்ச்சல் கண்காணிப்புப் பிரிவு சிறப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளதால் நோய்களைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் கவனத்துடன் இல்லாவிட்டால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவும் அபாயம் உள்ளது" என்றார் .
சமூக இடைவெளி
சமூக இடைவெளி குறித்து அவர் கூறுகையில், "இருபதுக்கும் மேற்பட்டோர் கூடும் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்திருந்தாலும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது அவசியம். படித்த நடுத்தர மக்களிடம் இல்லாத பெருமளவு விழிப்புணர்வு நரிக்குறவ மக்களிடம் இருக்கிறது. அதை நான் நேரடியாகப் பார்த்து வியந்திருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அலுவலர்களுக்குப் பாராட்டு
"நோய்த் தடுப்பூசி வரும்வரை பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். உணவு உண்ணும்போதுகூட சேர்ந்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. விழுப்புரத்தைப் பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதர நோய்களுக்கான சிகிச்சைகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. அதற்கு விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களைப் பாராட்டுகிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க... விழுப்புரத்தில் கரோனா தடுப்புப் பணி மேற்கொண்ட சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்!