கரோனா பாதிப்பால் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு, தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுவருகின்றன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கணக்கன்குப்பம் அரசுப் பள்ளியில், தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்களுக்கு எவர் சில்வர் குடம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பரிசாக வழங்கிவருகிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இஸ்மாயில். அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துவதற்காக, இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
தனியார் பள்ளிகளின் மீது உள்ள மோகத்தை தவிர்த்து, அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை அதிகளவில் சேர்க்க பெற்றோர்கள் முன் வரவேண்டும் என்பதே தனது நோக்கம். அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த குலுக்கல் முறையில் பெற்றோருக்கு அரைபவுன் தங்க காசு வழங்க உள்ளதாகவும் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதனை வெறும் வாய் வார்த்தைகளாக மட்டும் அறிவிக்காமல் செயல்படுத்தியும் வருகிறார். இதுதொடர்பான துண்டு பிரசுரத்தையும், அவர் பொதுமக்களிடையே வழங்கி வருகிறார்.
இதேபோல் பள்ளி வளாகத்தை முறையாக பராமரித்து வருகிறார். அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இஸ்மாயில் எடுத்துள்ள முயற்சி பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் இஸ்மாயில் கூறும்போது, "ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு புத்தகம், புத்தகப்பை, மிதிவண்டி, மடிக்கணினி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கி வருகிறது.
இருப்பினும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருவது மன வேதனை அளிக்கிறது. மாணவர்களின் நலன் கருதியும் பொருளாதார ரீதியாக, அவர்களை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்திலும் நான் இந்த உதவியை செய்து வருகிறேன்.
கரோனா காலத்தில் பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கஷ்டத்தில் பங்கு பெறும் வகையில், அரசு பள்ளியில் சேர்க்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய், எவர் சில்வர் குடம் ஆகியவற்றை பரிசாக அளித்து வருகிறேன்.
அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் அரை பவுன் தங்க காசு வழங்கவும் முடிவு செய்துள்ளேன்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும்போது, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் பணம் செலுத்த வேண்டும். ஆனால் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கும்போது நாங்கள் அவர்களுக்கு உதவி செய்வோம்.
எனது மாத சம்பளத்தில் ஒரு பகுதியை, இதற்காக நான் சேமித்து வைத்து செலவு செய்து வருகிறேன். இதுபோன்ற உதவிகள் செய்வதன் மூலம் கடந்த ஆண்டு புதிதாக 40 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 100 ஆக உயர்த்துவதே எனது நோக்கம்" என்றார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் குணசேகரன் கூறும்போது, "எனது மகளை கனகன்குப்பம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேர்த்துள்ளேன். எங்களுக்கு தலைமையாசிரியர் ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கியுள்ளார்.
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் சிறந்த முறையில் பாடம் நடத்தப்படுகிறது. தனியார் பள்ளி மாணவர்களை விட, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது சிறந்தது" என்றார்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது - முதலமைச்சர் பெருமிதம்!