ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் ரோனித்ரஞ்சன் (23). அரசியல் பொருளாதாரம் பட்டம் படிக்கும் இவர் ராணுவத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியவர். முதுகெலும்பில் அடிபட்டதால் ராணுவத்திலிருந்து விலகினார். தற்போது, இந்தியளவில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கட்டாய மனநலப் பாடத்தை இணைக்க வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து டெல்லிக்கு 4 ஆயிரம் கிமீ விழிப்புணர்வு பரப்புரை நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.
அந்த வரிசையில், இன்று காலை விருதுநகர் வந்த ரோனித்ரஞ்சன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நம் நாட்டில் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்கிறார். 13-15 வயதுக்குள்பட்ட 4 மாணவர்களில் ஒருவர் மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறார். 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நம் நாட்டில்தான் அதிக தற்கொலைகள் நடக்கின்றன.
எனவே, நாட்டில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் கட்டாயமாக மனநலப் பாடத்தை இணைக்க வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் கடந்த 16ஆம் தேதி கன்னியாகுமரியில் விழிப்புணர்வுப் பரப்புரை நடைபயணத்தைத் தொடங்கியுள்ளேன்.
வழிநெடுகிலும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களைச் சந்தித்து இக்கோரிக்கைக்காக கையெழுத்து பெற்றுவருகிறேன். நடைபயணமாக டெல்லியை அடைந்து மத்திய கல்வி அமைச்சகத்தில் இந்தக் கையெழுத்துகளைச் சமர்ப்பிக்க உள்ளேன்" எனத் தெரிவித்தார்