விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலர்களின் உயர்மட்டக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்ததைத் தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ’மாவட்டம் முழுவதும் 33 பறக்கும் படை மற்றும் நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலைக் குழுக்கள் தேசிய நெடுஞ்சாலை, முக்கிய சந்திப்பு ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபடும். கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அனைத்து இடங்களிலும் பறக்கும் படை சோதனையில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி தொகுதியில் மூன்று பறக்கும் படைகளும், மூன்று நிலை குழுக்களும் செயல்படும். மற்ற அனைத்து தொகுதிகளிலும் ஒரு பறக்கும் படை, ஒரு நிலைக்குழு செயல்படும்.
அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு, பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவை கண்காணிக்கப்படும். விதிகளை மீறி எடுத்து செல்லும் பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்படும்.
வாகனங்களில் செல்பவர்கள் பணங்களை எடுத்துச் செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.