தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல், வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் தொகுதிக்கு மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை-செஞ்சி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிரவு (மார்ச்.6) வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கார் ஒன்றில் சோதனையிட்டபோது, அதில் முறையான ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனர். காரில் பயணம் செய்தவர் சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் சி.வி.நரசிம்மஹரி என்பதும், திருவண்ணாமலையில் நடக்கும் படப்பிடிப்பில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் பட்டுவாடா செய்துவிட்டு, மீதி பணத்தை சென்னைக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், முறையாக ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல் பறக்கும் படையினர் இயக்குநரிடம் அறிவுறுத்தினர்.