புதுச்சேரி மாநில அதிமுக செயலாளராக இருந்து வந்த புருஷோத்தமன் நேற்று விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் பகுதியில் இருந்த தனது நிலத்தைப் பார்வையிட சென்றபோது விஷ வண்டு கடித்து உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த புருஷோத்தமன் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நண்பகல் 12.00 மணியளவில் நேரில் சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அவருடன் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விக்கிரவாண்டி எம்எல்ஏ முத்தமிழ்ச் செல்வன் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி; 'மறைந்த புருஷோத்தமன் பழகுவதற்கு எளிமையானவர். அவரது இழப்பு அதிமுகவிற்கு பேரிழப்பு' என்று கூறினார்.
மேலும் அவர், 'புருஷோத்தமனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கழக நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து புருஷோத்தமன் உடல் அவரது சொந்த ஊரான புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க : விஷவண்டு தாக்கி புதுச்சேரி அதிமுக செயலாளர் உயிரிழப்பு