வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த நிவர் புயல் இன்று கரையை கடந்தது. இந்த புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை. இருப்பினும் மரக்காணம் அருகே புதுச்சேரி செல்லும் சாலையில் அனுமந்தை மற்றும் மரக்காணம் பகுதிகளில் விழுந்து கிடந்த மரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான மீட்பு குழுவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன்,"புயல் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய ஒவ்வொரு 10 கிலோமீட்டர் தொலைவிலும், ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் புயல் பாதித்த பகுதிகளில் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் 3 இடங்களில் விழுந்து கிடந்த மரங்களை உடனடியாக ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளோம்.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 30 மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் 8 குழுவினர் மீட்பு பணியில் உள்ளனர். மரம் விழுந்ததை தவிற வேறெந்த பாதிப்பும் மாவட்டத்தில் இல்லை. புயலால் விழுந்த மரங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்புகள் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை”என்றார்.
இதையும் படிங்க: நிவர் புயல்: 52 நிவாரண முகாமில் 2706 நபர்கள் தங்கியுள்ளனர்