விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கக்கோரி இன்று அப்பகுதி மக்களுடன் சேர்ந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விழுப்புரம் அருகேயுள்ள பெரியசெவலை, ஆமூர், கொளத்தூர், சரவணபக்கம் உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளை திருவெண்ணை நல்லூர் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.
இந்த பகுதிகளை 20 கி.மீ தொலைவிலுள்ள விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்காமல், 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைத்திருப்பதால் இவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். நிர்வாக வசதிக்காக இவர்களை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்வில் இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். இதேபோல், உள்ளாட்சித் தேர்தலில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பிரிவுகளில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும்.
தற்போது, விழுப்புரத்தில் துவங்கப்படவுள்ள சட்டக்கல்லூரிக்கு சுமார் 18 கி.மீட்டருக்கு அப்பால் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாவர்கள். மேலும், விழுப்புரம் மாவட்டத்தை போல் கள்ளக்குறிச்சியிலும் ஒரே இடத்தில் பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள், நீதிமன்றம் போன்றவை அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'ஒவ்வொரு மாணவனும் ஒரு விஞ்ஞானி திட்டம்' - சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!