விழுப்புரம்: ஆரோவில் வானூர் அருகே உள்ள கோட்டக்கரை பகுதியைச்சேர்ந்தவர், ஜெயக்குமார். இவர் திமுக பொதுக்குழு உறுப்பினராகப்பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை ஜெயக்குமார் தேநீர் அருந்துவதற்காக இரு சக்கர வாகனத்தில் இரும்பை எனும் பகுதியினை நோக்கி சென்றுகொண்டிருந்தார். இரும்பை சிவன் கோயில் அருகே 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
அவர்களிடம் இருந்து ஜெயக்குமார் தப்பித்து உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடிய போதும் அவரை விடாமல் ஓட, ஓட துரத்தி சென்று, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இந்த தாக்குதலில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜெயக்குமார், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப்பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாகத்தேடி வருகின்றனர். திமுக பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வானூர் பகுதியில் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விழுப்புரம் அருகே தீ விபத்து - 8 வீடுகள் சேதம்