விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் குடியிருப்பு பட்டா நிலம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அதனருகில் வசிக்கும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த நில உரிமையாளர்கள், தங்களது நிலத்தைச் சுற்றி தீண்டாமை கம்பி வேலி அமைத்து தடுத்துள்ளார்கள்.
இதுகுறித்து வட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்கள் பகுதியை விட்டு வெளியேவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோமன்தாஸ் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர், இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நான்கு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.