தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு வள்ளி என்ற தங்கை இருந்தார். அவர் இருபது வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதையடுத்து, தன் தங்கையின் மகன் லோகேஸ்வரனை அமைச்சர் சண்முகம் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், திண்டிவனத்தில் உள்ள அமைச்சரின் வீட்டில் தங்கியிருந்த லோகேஸ்வரன் கடந்த 7ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதையறிந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திண்டிவனத்தில் உள்ள அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டுக்கு நேரில் சென்று மறைந்த லோகேஸ்வரன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்.
துணை முதலமைச்சருடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.