விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதையடுத்து விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்டப் பகுதிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட செவிலியர் மூலம் வீடு, வீடாக நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை மேற்பார்வையில், கரோனா கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(ஜூன் 28) ஒரே நாளில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 814ஆக உயர்ந்துள்ளது.
மேலும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பெற்று வந்த 18 மாதக் குழந்தை மற்றும் 75 வயது மூதாட்டி ஆகிய இருவர் இன்று (ஜூன் 28) உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.