டெல்லியிலுள்ள படேல் நகரைச் சேர்ந்தவர் அருண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). சமையல் கலை படிப்பை முடித்திருந்த இவர், கடந்த மாதம் புதுவைக்கு வேலை தேடி வந்திருந்தார். ஆனால், அவர் நினைத்தபடி வேலை எதுவும் கிடைக்காததால் கையில் பணமின்றி தவித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்ததால் எங்கும் செல்ல முடியாமல் விழுப்புரத்தில் சுற்றித் திரிந்துள்ளார்.
இதற்கிடையே இவருக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவரை மீட்ட காவல் துறையினர் விழுப்புரம் கரோனா தடுப்பு சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று கூறி சுகாதாரத் துறை அலுவலர்கள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவரை விடுவித்தனர்.
ஆனால், அடுத்த நாள் வெளியான அவரது ரத்த மாதிரி ஆய்வு முடிவில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் ஏழு தனிப்படைகள் அமைத்து கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அந்த இளைஞரைத் தேடி வந்தனர்.
மேலும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளில் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 14) மாலை செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்த லாரி ஷெட்டில் இருந்த அவரை விழுப்புரம் காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒன்று சேர்ந்து கரோனாவை விரட்டுவோம் - மழலைகள் சொல்வதைக் கேளுங்கள் மக்களே!