விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி நிர்வாக ஒப்பந்த மீறல்களைக் கண்டித்தும், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தியும் இன்று ஏஐடியுசி தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
போராட்டத்தின் நடுவே செய்தியாளர்களிடம் பேசிய ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் கே.ரவி, “தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதில் வெளிமாநில தொழிலாளர்களால் தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பிரச்னைகள் எழுந்துள்ளது.
மேலும், வெளிமாநில தொழிலாளர்கள் வருகையால் சுங்கச்சாவடியில் சாலை பராமரிப்பு பணியாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் அமைப்பு சாரா தொழில்களில் 85 முதல் 90 சதவீதம் பேர் சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அப்படியில்லை. இதற்காக தனி சட்டம் இயற்ற வேண்டும்” என்றார்.