விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில், விழுப்புரம் மாவட்டம் ஓதியத்தூர் புதூரைச் சேர்ந்த ஜான் திலீப் டிசில்வா என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த நிலையில், அந்த காரணத்தைப் பயன்படுத்தி, அப்பள்ளியில் பணிபுரியும் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர், மாணவரை திட்டமிட்டு பள்ளியிலிருந்து நீக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் சாதிய வன்மம் காரணமாக உள்நோக்கத்துடன் தனது மகனை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் லீமா ரோஸ் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு புகார் மனு அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், "நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிருத்தவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் எனது உடல் நிலையும் மோசமடைந்து, நான் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு முடங்கிவிட்டேன். வருமானத்திற்கு கஷ்டப்பட்டு மூத்த பிள்ளைகளின் வருமானத்தில் அன்றாடம் பிழைப்பு நடத்தி வருகின்றேன்.
எனது கடைசி மகன் ஜான் திலீப் டிசில்வா கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி படித்து வருகிறார். அந்த தேர்வில் நான்கு பாடங்களில் தோல்வியுற்றுள்ளார். எனவே, நான் உடனடி தேர்வுக்கான கட்டணம் 305 ரூபாயை பள்ளி தலைமை ஆசிரியரிடம் செலுத்தினேன். சில நாட்கள் சென்ற பின் தேர்வு நுழைவுச்சீட்டு அனைவருக்கும் வந்துள்ளது, எனது மகனுக்கு வரவில்லை. இதனை அறிந்த எனது மகன் வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளார். வகுப்பு ஆசிரியர் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகுமாறு கூறியுள்ளார்.
தலைமை ஆசிரியரை அணுகி கேட்டபோது அவர் அலட்சியமாக அடுத்த ஆண்டு எழுதிக்கொள்ளலாம் எனப் பதிலளித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு பணம் கட்டி அடுத்த ஆண்டு எழுதச் சொன்னால் என்ன அர்த்தம்? என கேட்டபோது, கணினி ஆசிரியரை கேளுங்கள். அவர்தான் ஆன்லைனில் பணம் கட்டினார் என்று கூறி தட்டி கழித்தார். ஆன்லைனில் பதிவு செய்யும் கணினி ஆசிரியர் குருவிடம், எனது மகன் தனது தேர்வு கட்டண ரசீதை கேட்டதற்கு அப்படி எதும் இல்லை என்று கூறியுள்ளார்.
சரி பணத்தையாவது கொடுங்கள் என கேட்டபோது அடுத்த வருடத்திற்கான கட்டணமாக எடுத்துக் கொண்டோம் எனக் கூறி மிரட்டியுள்ளார்கள். மேலும், தலைமை ஆசிரியரும், கணினி ஆசிரியரும் உடனடி தேர்வுக்கு பணம் கட்டவில்லை என்பதை அறிந்தேன்.
எனது மகனின் பெயரை பதிவு செய்யாதது மட்டுமில்லாமல், அதனைப் பற்றிய தகவலை அவரின் பெற்றோராகிய எங்களுக்கு தெரிவிக்கவில்லை. எனது மகனிடம் இதை யாரிடமும் சொல்லி பெரிதாக்க வேண்டாம் என்று தலைமை ஆசிரியர் ஜெயசீலன் மற்றும் கணினி ஆசிரியர் குரு இருவரும் எனது மகனை அச்சுறுத்தியுள்ளனர். இதனால், மனமுடைந்த என் மகன் பள்ளிக்குச் செல்லாமல் பயந்து வீட்டிலேயே உள்ளார். அவருக்கு உடல் நிலையும் மனநிலையும், பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் எனது மகன் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வினை எதிர்கொள்ள பயந்து பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்றும், அங்கு சென்றால் மாணவர்கள் அவமானப்படுத்துவார்கள் என்றும் கூறி வீட்டிலேயே முடங்கி உள்ளார்.
கடந்த ஜூலை 28ஆம் தேதி 11ஆம் வகுப்புக்கான உடனடி தேர்வு முடிவுகள் வெளியானபோது தேர்வு எழுதிய மற்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்பதை அறிந்த எனது மகன், தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டனர். எனக்கு Hall ticket கிடைத்திருந்தால் நானும் தேர்ச்சி பெற்றிருப்பேன் என்று கூறியுள்ளான். இதனால், என் மகனின் வகுப்பு ஆசிரியர் அவனை சக மாணவர்கள் முன் தாக்கி வகுப்பறையைவிட்டு வெளியே போ, உன் தாயாரை அழைத்துவா என்று கூறியுள்ளார். நான் அடுத்த நாள் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் எவ்வளவோ கெஞ்சியும், கை எடுத்து கும்பிட்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். அதற்கு அந்த ஆசிரியர் உன் மகன் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன, எனக்கு சம்பளம் என் வங்கி கணக்கில் வந்துவிடும் என்று அலட்சியமாக கூறி TC-யை வாங்கிக் கொண்டு போ என்றார்.
இதனால், என் மகன் தேர்வு எழுதவும் முடியவில்லை, பள்ளிக்கு போகவும் முடியவில்லை என்று வருந்தி உயிருடன் வாழ்வதைவிட சாவதேமேல் என்று வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இப்படி எனது மகனை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி எதிர்காலத்தையே பாழாக்கி தற்கொலைக்கு தூண்டிய தலைமை ஆசிரியர் ஜெயசீலன் மற்றும் கணினி ஆசிரியர் குரு இருவரும் கல்வியை இழந்த என் மகனின் வாழ்க்கையை எப்படி சரி செய்வார்கள் என்பது தெரியவில்லை.
மேலும், நாங்கள் ஏழை என்பதாலும், ஆதிதிராவிட கிருத்தவர் என்பதாலும், எங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதினை அறிந்த தலைமை ஆசிரியர் மற்றும் கணினி ஆசிரியர் இருவரும் திட்டமிட்டு மகனின் எதிர்காலத்தை சீர்குலைதுள்ளனர். இந்த நிலைமையில் அவர்களது மகனோ மகளோ இருந்திருந்தால் இப்படி அலட்சியமாக இருப்பார்களா? என்று தெரியவில்லை. ஆகவே, எங்கள் பிரச்னையை கண்ணீரோடு உங்களிடம் கூறுவதோடு, என் மகனின் கல்வியைத் தொடர வேண்டுகிறேன். மேலும், எனது மகனுடன் படித்தவர்களிடம் விசாரித்தபோது, சாதி ரீதியாகவும் வேற்றுமை காட்டியும் எங்களை வஞ்சித்துவருகிறார்கள் என சில மாணவர்கள் கூறுவதை அறிந்தேன்.
மேலும் தங்களது நல்லாட்சியில் தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்கு மறைமுகமாக வன்கொடுமை செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு தங்களால் மட்டுமே தகுந்த நீதியும், தீர்வும் காண முடியும் என்பதாலும், தகுந்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு எதிராக நடந்து வரும் இந்த சாதிய தீண்டாமை பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றும், மாணவர்களின் கனவை சிதைக்கும் இப்பள்ளியின் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.