விழுப்புரம்: இந்து மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் இணைப்பு விழா விழுப்புரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி, அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களை இந்து மக்கள் கட்சியில் இணைத்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், “மதமாற்றம் அதிகரிக்க செய்யவும்; திமுக வளர்ச்சி அடையவும் வேண்டும் என்றால் ராஜராஜ சோழன் இந்து இல்லை, வள்ளலார் இந்து இல்லை, பட்டியல் இன மக்கள் இந்து இல்லை என இவர்கள் கூறி வருகின்றனர்.
சனாதானத்தை எதிர்க்கிறோம் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், அவரது வாழ்க்கை முறையினை சனாதானத்தின் அடிப்படையில் தான் வாழ்ந்து வருகின்றனர். சனாதானத்தை ஒழிப்போம் எனக்கூறி வருவது தவறான கருத்து. இந்த கருத்து பிற மதத்தவருக்கு ஆதரவான கருத்து. இது மக்களிடையே சாதி சண்டையை மூட்டி விடுகின்ற கருத்து. இந்த கருத்தை முறியடிப்பதற்காக இந்து மக்கள் கட்சி எப்பொழுதும் களத்தில் நிற்கும்.
திராவிட மாடல் என்றால் சாராய மாடல். தீபாவளிக்கு மட்டும் இலக்கு வைத்து மது விற்கப்படுகிறது. ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் இலக்கு வைத்து மது விற்பனை செய்யப்படுவதில்லை. இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாகத் திகழும் குஜராத் அரசு மது விற்பதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் சாராய கம்பெனி நடத்தி அவர்களே அரசுக்கு மதுவை விற்கின்றனர்.
முதன்முதலில் மதுக்கடையைத் திறந்தவர், கருணாநிதி. மூன்று நாள்களில் 700 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு மக்களின் உயிரை குடித்துக்கொண்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இதைப் போன்றதொரு நிலைமை இல்லை. திராவிட மாடல் என்றால் குண்டு வைப்பது தான் திராவிட மாடல். திமுக ஆட்சிக்கு வந்தாலே வன்முறை, பயங்கரவாதம் தலைவிரித்து ஆடும்.
தீபாவளிப்பண்டிகை அன்று கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலைத் தகர்க்கும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டது. ஆண்டவன் அருளால் அது தடுக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பை சிலிண்டர் விபத்து என திசை திருப்பும் செயலில் திமுக ஈடுபடுகிறது. இந்த குண்டுவெடிப்பை கண்டித்து எந்த அரசியல் கட்சியும் பேசவில்லை. இவர்கள் எல்லோரும் இரட்டை வேடம் போடுபவர்கள்.
இந்து மதத்தைக் குறி வைத்து இழிவுபடுத்தி பேசிவருகிறது. பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் கூறிய எதையுமே இவர்கள் செயல்படுத்தவில்லை. இதனை மறைப்பதற்கு இந்தி திணிப்பு எனக் கூறி மக்களைத் திசை திருப்புகின்றனர்.
இவர்கள் நடத்துகின்ற பள்ளியில் தான் இந்தி திணிப்புள்ளது. நாங்கள் இந்தியை திணிப்பு செய்கிறோம் என நிரூபித்தால் 10 லட்சம் ரூபாய் தருகிறோம்” என சவால் விடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சாய் கமல் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கண்டனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் முதன்முதலாக தமிழ்நாட்டில் சித்த மருத்துவப்பல்கலைக்கழகம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்