சென்னையைச் சேர்ந்த ஜெனிஃபர் என்பவருக்கு ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாகக் கூறி, 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த கோவை கணபதியைச் சேர்ந்த ஆச்சார்யாவை, கடந்த வாரம் அவிநாசி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், விழுப்புரம் எண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் என்பவர் தொழிலுக்காக பணம் தேவைப்படுவதால், நண்பர் ஜாகீர் உசேன் அளித்த தகவலின் அடிப்படையில் ஆச்சார்யாவிடம் பத்திரத்தை அடமானமாக வைத்து 3 கோடி ரூபாய் கடன் பெற முயற்சி செய்தார்.
கடன் கொடுக்க ஒப்புக் கொண்ட ஆச்சார்யா திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ஒரு தங்கும் விடுதியில் கடந்த மாதம் 17ஆம் தேதி பிரபாகரனை வரவழைத்து பரிசீலனை கட்டணமாக 10 லட்சம் ரூபாய் பெற்று, 2.10 கோடி ரூபாய் பணத்தை சூட்கேசில் வைத்து கொடுத்துள்ளார்.
பிரபாகரன் ஊருக்குச் சென்று பார்த்ததில் அனைத்தும் போலி ரூபாய் நோட்டுக்கள் என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பிரபாகரன் கொடுத்தப் புகாரை அடுத்து, ஏற்கெனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆச்சார்யா மீது மேலும் ஒரு மோசடி வழக்கை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.