புதுச்சேரி மாநிலத்திலிருந்து, ஆந்திராவுக்குத் தொடர்ந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், நேற்று இரவு திண்டிவனம் மதுவிலக்குப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திண்டிவனம் மேம்பாலத்தின் மீது வாகன சோதனை நடத்தப்பட்டது.
அப்போது புதுச்சேரியிலிருந்து ஆந்திராவுக்குச் சென்ற ஆந்திர அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, மதுபாட்டில்களைக் கடத்தி வந்த காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா வாணாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் (40) என்பவரையும், மதுபாட்டில் கடத்துவதற்கு உடந்தையாக இருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரையும் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் மது பாட்டில்களைக் கடத்தப் பயன்படுத்திய ஆந்திர அரசுப் பேருந்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.