விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள் விக்கிரவாண்டி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக, அமைச்சர் சி.வி. சண்முகம் விக்கிரவண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, விக்கிரவண்டி பேரூராட்சி ஆறாவது வார்டுக்குள்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்தனர்.
பின்னர் இது தொடர்பான மனு ஒன்றை சி.வி சண்முகத்திடம் அளித்தனர். மக்களின் மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சி.வி. சண்முகம், உங்கள் பகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் யார்? என்று பொதுமக்களை நோக்கி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பொதுமக்களிடம் வாங்கிய மனுவை வாங்கி மடித்து வைத்து விட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பி சென்றார். அமைச்சர் சி.வி. சண்முகம் பொதுமக்களிடம் ஆவேசப்பட்டு கேள்வி கேட்கும் காணொலிக் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.