விழுப்புரம் மாவட்டம் வானூர் தனித் தொகுதியில் போட்டியிடும் விசிக பொதுச்செயலாளர் வன்னியரசை ஆதரித்து திருமாவளவன் திருச்சிற்றம்பலம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய திருமாவளவன், "திமுகவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையை அதிமுக இழந்துவிட்டது. திமுகவின் எதிர்க்கட்சியாக இங்கு பாஜகதான் உள்ளது. மக்கள் இரட்டை இலைக்குச் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவிற்குச் செலுத்தும் வாக்காக மாறும். ஆகையால் அனைவரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்கு அளிக்க வேண்டும்.
தற்போது தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது. ஆனால் பாஜக-அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் இங்கு மதக்கலவரம் அதிகரிக்கும். மேலும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கிடையே ஒற்றுமை பாதிக்கப்படும்.
புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் அது புதுச்சேரிக்கு மட்டும் ஆபத்து அல்ல; தமிழ்நாட்டிற்கும் ஆபத்து. பாரதிய ஜனதா கட்சி மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு ஒருபோதும் குரல் கொடுத்தது கிடையாது.
பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் மொத்தம் மூன்று சின்னங்கள் உள்ளன. ஒன்று தாமரை மற்றவை இரட்டை இலையும் மாம்பழமும். தங்கள் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, திமுகவின் சின்னங்களுக்கு வாக்களித்து, கதிர் அரிவாள் கொண்டு நெல் அறுத்து கைகள் மூலம் அரிசியைப் பானையில் இட்டு உதயசூரியனுக்கு மே 2ஆம் தேதியில் வெற்றி என்னும் பொங்கலைப் படைக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும்" என்றார்.