விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற இடத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஏற்பாடு பணிகள் இன்று (பிப்.25), கால்கோல் விழாவுடன் தொடங்கின. இந்த மாநாட்டில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன்று காலை நடைபெற்ற விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, இந்து அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஓஎஸ் மணியன், கே.பி முனுசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கு நடைபெற்ற கால்கோள் விழாவில் அமைச்சர்கள் கலந்துகொண்டு பந்தக்கால் நட்டு மாநாட்டுக்கான பணிகளை தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிமுக மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்த மாபெரும் மாநில மாநாடு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுகிறது. ஒரு லட்சம் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளுக்காக திருச்சியில் மாபெரும் மாநாட்டை நடத்தி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தார். அதே போன்ற மாபெரும் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் என அதிமுக கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துப்புரவு பணியில் இருந்து குறிப்பிட்ட சாதி மக்கள் வெளியேற வேண்டும்- திரைப்பட இயக்குநர் அமீர்