விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுகவின் 51ஆம் ஆண்டு கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (அக்-12)நடந்தது. இதில் நாடாளுமன்ற எம்.பி. சிவி சண்முகம் பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரைக் குறிப்பிடாமல் பல்வேறாக அவரை விமர்சித்தார்.
அதிமுக ஆரம்பித்ததே போராட்டத்தில் தான். பொதுமக்கள் வீதிகளில் இறங்கி கட்சி ஆரம்பிக்க கூறிய நிலையில் எம்ஜிஆர் கட்சியைத் தொடங்கினார் என்றும்; தொண்டர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக என்றும்; கட்சியில் தற்போது சில சலசலப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், ‘நேற்று வரை கட்சியில் இருந்து கொண்டு பெயர், சொத்து, சுகம் அனுபவித்துவிட்டு உச்சபட்சமான முதலமைச்சர் பதவி, கட்சியின் தலைமை பதவி என அனைத்தையும் ஆண்டு, அனுபவித்த அவர்(ஓபிஎஸ்) பெயரை சொன்னால் கூட நமக்கு கெடுதல்தான். அவர் தான் இந்த இயக்கத்தை கூண்டோடு அழிக்க நினைக்கிறார். அதிமுக என்பது யாரை எதிர்த்து தொடங்கப்பட்டது.
1972இல் கருணாநிதியை எதிர்த்து அதிமுக தொடங்கப்பட்டது. ஜெயலலிதா இன்னும் கூட சில ஆண்டுகள் நம்முடன் வாழ்ந்து இருப்பார். ஜெயலலிதா இன்று நம்முடன் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் திமுக தான், இத்தகைய திமுக, ஸ்டாலினுடன் அவர் (ஓபிஎஸ்) நேரடி உறவு வைத்துக்கொண்டுள்ளார்.
அதிமுகவின் வேட்டியை கட்டிக்கொண்டு திமுகவில் இணைந்து செயல்பட்டு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தானும், தன் குடும்பமும் மட்டும் பிழைக்க வேண்டும் என அவர் செயல்படுகிறார். அதிமுகவின் இயக்கத்தை அழிக்க அவர் கிளம்பியுள்ளார். அவரை போன்று பலபேரை அதிமுக கண்டுள்ளது. அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் கடைசியில் அநாதையாகத் தான் போவார்கள்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 16 மாதங்களில் மக்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பினை பெற்ற அரசாக திமுக உள்ளது. எப்போது இந்த ஆட்சியை தூக்கி எறியலாம் என மக்கள் தயாராக உள்ளனர்.
திமுக ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்யும் அராஜகங்களை மக்களிடத்தில் எடுத்துரைத்து, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத்தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய தோல்வியைக்கொடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு ஒத்திவைப்பு