விழுப்புரம்: செஞ்சி வருகை தந்து செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று(டிச.21) கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார்.
அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் டெல்லியில் இடைத்தரகர்கள் தான் போராடுகிறார்கள் விவசாயிகள் போராடவில்லை என்று குஷ்பு கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், இது தவறான புரிதல். அங்கு இருப்பவர்கள் அனைவருமே டிராக்டர் முதற்கொண்டு எடுத்து வந்து போராடி வருகிறார்கள். அவர்கள் இடைத்தரகர்கள் அல்ல, சேற்றில் கால் பதித்தவர்கள் இங்கிருந்து போய் அவர்களுக்காக ஆதரவுக் குரல் கொடுப்பவர்களும் விவசாயிகள்தான், விவசாயிகள் இந்த மண்ணின் மைந்தர்கள் தான். அவர்களை இடைத்தரகர்கள் என்று பேசுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.
அதிமுக அமைச்சர்கள் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கமல்ஹாசன் காணாமல் போய் விடுவார் என தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள் என்ற கேள்விக்கு, அது அவர்களின் பயம், அவர்களின் பிரார்த்தனை என்றுதான் நினைக்கிறேன். மேலும் அவர்களின் வேண்டுதல் நடக்குமா நடக்காதா என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: உங்களின் விஸ்வரூபம்தான் நான், இனி என் பெயர் மக்கள் - கமல்