விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பின் நான்கு பிளாக்குகளில், துணை ஆட்சியர் நிலையிலான அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இத்தகைய குடியிருப்புகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் உள்ளது. ஆனால் இங்குள்ள குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ள குடியிருப்புகள் பராமரிப்பின்றி உள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பெரும்பாலான வீடுகளின் சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் வீடுகளின் ஜன்னல் கம்பிகள் துரு பிடித்த நிலையிலும், பல வீடுகளில் ஜன்னலே இல்லாமலும் பாதுகாப்பற்ற நிலை நிலவி வருகிறது.
மேலும் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இங்கு கிடையாது. குறிப்பாக சாலை வசதி, குடிநீர் வசதி, வடிகால் வாய்க்கால் வசதி இப்படி எதுவுமே இல்லாமல் இருக்கிறது. இங்கு வசிப்பவர்கள் அனைவருமே அரசு ஊழியர்கள் என்பதால், இங்குள்ள குறைகளை யாரிடமும் தெரிவிக்க முடியாமல் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அதேநேரம் இங்குள்ள அரசு ஊழியர்கள் சிலர், தாங்கள் குடியிருக்கும் வீடுகளை சொந்த செலவில் அவ்வப்போது மேலோட்டமாக சீரமைத்து வருகின்றனர். இருப்பினும் இங்குள்ள கட்டிடங்கள் முழுவதும் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்தின்போதும் இங்குள்ள கட்டிடங்கள் மேலும் மேலும் சேதமடைகின்றன.
இது மட்டுமல்லாமல் குடியிருப்புகளுக்குள் கட்டட மேற்கூரை, சிமெண்ட் பூச்சுகள் விழுவது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனிடையே நேற்று (ஆகஸ்ட் 25) மாலை பெய்த சிறிதளவு மழைக்கே இங்குள்ள ‘சி’ பிளாக்கின் இரண்டாவது மாடியில் இருந்த பால்கனி சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
மழையினால் ஏற்கனவே பழுதாகி இருந்த இச்சுவர் விழுந்ததால் அங்குள்ளவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்த நேரத்தில் யாரும் அந்த இடத்தில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
எனவே மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாக தலையிட்டு, ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடப்பதற்கு முன் துரிதமாக செயல்பட்டு அரசு ஊழியர் குடியிருப்புகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும என குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காவலர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளைத் திறந்துவைத்த முதலமைச்சர்!