நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து ஜூலை 26ஆம் தேதி வெளியாகயுள்ள படம் ’ஏ 1’ (அக்யூஸ்ட் நம்பர் 1). அண்மையில் படத்தின் டீஸர் வெளியானது. அதில் பிராமணர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக நடிகர் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு அந்தணர் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கார்த்திக் சிவம் கூறுகையில், "பிராமணர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வந்துள்ளன.
சந்தானம் நடித்துள்ள 'ஏ1' படத்தில் பிராமண சமுதாயப் பெண்களையும், எங்களது கலாசார வார்த்தைகளையும் இழிவுபடுத்தும் விதமாக பலவிதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
எனவே, சர்ச்சைக்குரிய வசனங்களை உடனே நீக்க வேண்டும். இந்த திரைப்படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும். மேலும், சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.