விழுப்புரம்: பெற்ற குழந்தையை கொடூரமாகத் தாக்கி, அதனை வீடியோ எடுத்து வைத்திருந்த தாயைக் கைது செய்ய தனிப்படை காவல் துறையினர் ஆந்திர மாநிலம் விரைந்துள்ளனர்.
செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலப்பாடி மதுரா- மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர், வடிவழகன். இவருக்கு ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துளசி (23) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோகுல் (4) பிரதீப் (2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
கொடூரமாகத் தாக்கப்பட்ட குழந்தை
இந்த தகராறு காரணமாக, கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் துளசி, தனது இளைய மகன் பிரதீப்பை கொடுமையாகத்தாக்கி, அதனை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இதேபோல அடிக்கடி கொடூரமாகத் தாக்கி வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
தாக்குதலால் காயமடைந்த குழந்தை பிரதீப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, தற்போது தந்தையுடன் இருக்கிறார். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, துளசி குழந்தைகளை தந்தையிடம் விட்டு விட்டு தனது தாய் வீடான ஆந்திர மாநிலம் சென்று விட்டார்.
இந்நிலையில் குழந்தை தாக்கப்பட்டதை அறிந்த தந்தை வடிவழகன், அருகில் உள்ள துளசி மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர், துளசி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் தங்ககுருநாதன், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த குழு துளசியைக் கைது செய்ய ஆந்திர மாநிலம் சென்றுள்ளனர்.
'குழந்தை தற்போது ஆரோக்கியத்துடன் உள்ளான்'
இந்தச் சம்பவம் குறித்து, குழந்தையின் தந்தை வடிவழகன் கூறும் போது, "கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் துளசிக்கும் திருமணம் நடந்தது.
நாங்கள் மூன்று ஆண்டுகளாக சென்னையில் இருந்தோம். இரண்டு ஆண்டுகளாக மோட்டூர் கிராமத்தில் வசித்துவருகிறோம். நான் விவசாயம் செய்து வருகிறேன். எனது இரண்டாவது குழந்தை பிரதீப் குறைமாதத்தில் பிறந்தான். அதனால் சற்று பலம் குறைந்து இருப்பான். குழந்தைக்கு முகம் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்ட போது, அது குறித்து மனைவியிடம் கேட்டால், குழந்தை கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறினார்.
எனது மனைவி துளசி அவருடைய அம்மா வீட்டில் இருக்கிறார். அவர் குழந்தையை கொடூரமாகத் தாக்கி அதை வீடியோவாக எடுத்து வைத்திருப்பது இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. மனைவி மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். குழந்தை பிரதீப் தற்போது ஆரோக்கியத்துடன் தன் வசம் உள்ளார்' எனத் தெரிவித்தார்.
பெற்ற குழந்தையை துளசி மிருகத்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த பெண்: காவல் நிலையத்தில் ஒப்படைப்பு