காஞ்சிபுரம் மாவட்டம், வடமலைபாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதி திண்டிவனம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அந்தப் புகார் மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது, 'கடந்த ஆண்டு திண்டிவனம் அடுத்த ஒங்கூர் பகுதியைச் சேர்ந்த மந்திரவாதியான செல்வமணி, மாந்தீரிகம் செய்வதாகக் கூறி விளம்பரம் செய்திருந்தார்.
இதை நம்பி நாங்கள் இருவரும் அவரை அணுகியபோது வீட்டில் பில்லி சூனியம் இருப்பதாகக் கூறினார். மேலும் வீட்டிற்கு வந்து பரிகாரப் பூஜை செய்ய வேண்டும் எனக்கூறியதை அடுத்து அவரை வீட்டிற்கு வரவழைத்து பூஜை செய்தோம். அப்போது அவர் பரிகார பூஜை செய்யும்போது கன்னிப்பெண்கள் வீட்டில் இருக்கக் கூடாது என்றும், அப்படி இருந்தால் பூஜை பலிக்காது என்றும் தெரிவித்தார்.
இதை நம்பி எங்களது மகளை மந்திரவாதியுடன் வந்த அவரது உதவியாளர் ஹேமாவுடன் தங்கிக் கொள்ள அனுமதித்தோம். பின்னர் அவர் பரிகார பூஜையை முடித்துவிட்டுச் சென்றார். இதையடுத்து எங்களது மகளை திரும்ப அழைக்க ஹேமா வீட்டிற்குச் சென்றபோது, அங்கிருந்த செல்வமணி பரிகார பூஜைகள் இன்னும் முடியவில்லை என்பதால், எங்களது மகளை வீட்டிற்கு அழைத்து சென்றால் பலிக்காது என்று கூறினார்.
இதை நம்பி நாங்களும் எங்களது மகளை அங்கேயே விட்டுவிட்டு வந்தோம். ஆனால் அந்த மந்திரவாதி வீட்டில் நடந்த பூஜை பலிக்க வேண்டும் என்றால் அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என எங்களது மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது தற்போதுதான் எங்களுக்கு தெரியவந்தது' என குறிப்பிட்டிருந்தனர்.
மனுவை ஏற்ற காவல் துறையினர் ஒங்கூர் பகுதிக்குச் சென்று செல்வமணி, அவரது உதவியாளரை கைது செய்து விசாரித்ததில் பில்லி, சூனியம் எடுப்பதாகக் கூறி பல பெண்களை அவர் பாலியல் வன்புணர்வு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.