விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே பழங்குடியின இருளர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான காவல்துறை ஆய்வாளர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். திருக்கோவிலூர் அருகே உள்ள மண்டபம் கிராமத்தில் வசித்து வந்த பழங்குடியின இருளர் சமுதாயத்தைச்சேர்ந்த சிலர் மீது, கடந்த 2011ஆம் ஆண்டு திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக திருக்கோவிலூர் போலீசார், மண்டபம் கிராமத்தில் உள்ள பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தினர். மேலும் விசாரணை என்கிற பெயரில் பழங்குடியின இருளர் சமுதாயத்தைச்சேர்ந்த 4 பெண்களையும் போலீசார் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன், பக்தவச்சலம் உள்ளிட்ட 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, அவர்கள் மீது திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், முதல் குற்றவாளியான காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசனுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் நீதிபதி பாக்யஜோதி முன்னிலையில் இன்று (நவ-14)சரணடைந்தார்.
இதையும் படிங்க:ஹோட்டல் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி? - போலீசார் விசாரணை!