கள்ளக்குறிச்சி மாவட்டம், வடகீரனுரில் மதுபானம் கடத்தப்படுவதாக விழுப்புரம் மத்திய புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் கோவிந்தராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் திருக்கோவிலூர் மது அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் அசோகன், விழுப்புரம் மத்திய புலனாய்வுப் பிரிவு தலைமைக் காவலர் குமரன் ஆகியோர் காவலர்களுடன் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வடகீரனுா் பேருந்து நிலையத்திலிருந்து பிரம்மகுன்றம் நோக்கி, சந்தேகத்திற்கிடமான வகையில், அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி, சோதனை செய்ததில் 672 கர்நாடக மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மதுபானப் பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், வாகனத்தின் ஓட்டுநரை திருக்கோவிலூர் மது அமலாக்கப் பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், அவர் பிரம்மகுன்றம் பகுதியைச் சேர்ந்த குபேந்திரன்(43) என்பது தொிய வந்தது. மேலும், மதுபானப் பாட்டில்களை சுற்றுப்புற கிராமங்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து, சென்றதை ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- கூலி தொழிலாளி கைது