சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அஹ்மத் அலி கான். இவர் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் தனது மனைவி சையத் அலி பாத்திமா, மகன் சபானி, மகள் சச்சினா ஆகியோருடன் நேற்று இரவு திருநெல்வேலியில் உள்ள அவரது உறவினரின் சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர், அங்கிருந்து சென்னைக்கு கன்னியாகுமரி விரைவு ரயிலில், குளிர்சாதன வகுப்பு பெட்டியில் தனது குடும்பத்தினருடன் இரவு பயணம் செய்துள்ளார். இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் கண் விழித்து பார்த்துள்ளார். அப்பொழுது இவரது மனைவி சையத் அலி பாத்திமாவின் கைப்பையிலிருந்து 23 சவரன் நகை, 15 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த முகமது அலி கான் தம்பதியினர் பாதி வழியிலேயே இறங்கி விழுப்புரம் ரயில் நிலையத்தில் உள்ள காவல் துறையினரிடம் சம்பவத்தை கூறி புகார் மனு அளித்தனர். நேற்று இரவு மயக்க நிலையில் இருந்ததாகவும் காலையில் கண்விழித்து பார்த்தபோதுதான் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. மயக்க மருந்து அடித்து திருடியிருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்ட ரயில்வே அலுவலரின் மனைவி தெரிவித்தார்.
இதனையடுத்து விழுப்புரம் ரயில் நிலைய காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.