விழுப்புரம்: புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வை (NEET Exemption Bill) திணிக்கும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் இன்று (ஆக.20) நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்த உண்ணாவிரதப் போராட்ட நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சரும் திமுக துணைப் பொதுச் செயலாளரான பொன்முடி செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விடாமல் உச்ச நீதிமன்றம் வரை சென்று தடுத்தவர் முன்னால் முதலமைச்சர் கருணாநிதி என்றும், அதற்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கூட நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறினார். ஆனால், தற்போது உள்ள அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஆட்சியில் இருந்தபோதுதான் தமிழகத்தில் நீட் தேர்வு நுழைந்தது என்றார்.
தேர்தல் வாக்குறுதிகள் கூறியது போன்று நீட்டுக்கு எதிராக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் முதல் கூட்டத் தொடரிலேயே நீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுடன் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பியதாக தெரிவித்தார்.
தமிழக மட்டுமின்றி நீட் தேர்வுக்கு எதிராக நீட் தேர்வு கூடாது என 14 மாநிலங்கள் விரைவில் அறிவிக்க இருப்பதாகவும், நீட் தேர்வு என்பது மாநில கல்விக் கொள்கையில் தலையிடுவதாக அமைந்துள்ளதால்தான், திமுக முதலமைச்சர் ஸ்டாலின், கல்வி மாநில பட்டியலில் வரவேண்டும் என வலிறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு என்று சொல்லி பல்வேறு தனியார் நிறுவனங்கள் லட்சக்கணக்கில் கொள்ளையடிப்பதாக, அண்ணாமலை கூறியுள்ளது; நாங்கள் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுவதை போன்றது என்றார். நீட் தேர்வால் தனியார் கல்லூரிகளுக்குதான் பாதிப்பு என்றும் தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் இதுவரை 21 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்று உயிரிழப்பு தொடரக்கூடாது என்ற அடிப்படையில்தான் இது போன்ற உண்ணாவிரதங்கள், அறப்போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இது ஒன்றிய அரசிற்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த அறப்போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதற்கான முதல் முயற்சி தான் இந்த உண்ணாவிரதம் என்று கூறிய அவர், இதற்கும் ஒன்றிய அரசு செவி சேர்க்கவில்லை என்றால் போராட்டங்கள் தொடரும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுகவைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட அவை தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் மாவட்ட கழக பொருளாளர் ஜனகராஜ் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் எனப் பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: "ஆளுநர் ரவியே நீங்கள் யார்..?" - நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிர மேடையில் கர்ஜித்த உதயநிதி!