விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆர்வலருமான கோ.செங்குட்டுவன், எண்ணாயிரம் கிராமத்தில் கள ஆய்வு செய்த போது, மிகவும் பழமை வாய்ந்த தட்சிணாமூர்த்தி சிலையை கண்டறிந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "எண்ணாயிரம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் மிகப் பெரிய வேதக் கல்லூரி ஒன்று இயங்கி வந்தது, கள ஆய்வில் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி இப்பகுதியில் சிறப்பு வாய்ந்த தட்சிணாமூர்த்தி மூர்த்தி குளம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஆய்வு மேற்கண்ட பொழுது, விளை நிலங்களுக்கு நடுவே புதர்களில் மண்டியிருக்கும் திட்டு போன்ற பகுதியில் தட்சிணாமூர்த்தி சிற்பம் வீராசனத்தில் அமர்ந்திருக்கிறார். தட்சிணாமூர்த்தி, நான்கு கரங்களுடனும் தலை அலங்காரத்துடனும் காட்சி அளிக்கிறார்.
இவரது காதுகள், கழுத்து, கை மற்றும் கால்களை அணிகலன்கள் அணிந்துள்ளார். வலது காலை தொங்கவிட்டும் இடது காலை வலது காலின் மீது அமர்த்தியவாறும் அழகே உருவாக வலது கால் முயலகன் மீது அழுத்திய நிலையில் காணப்படுகிறது. இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி.10-11ஆம் நூற்றாண்டு ஆகும்.
தட்சிணாமூர்த்தி சிற்பம் இருக்கும் பகுதியில், ஏற்கெனவே சிவாலயம் இருந்து மறைந்துள்ளது. ஆவுடையார் உள்ளிட்ட தடயங்கள் இப்போதும் இங்கு காணப்படுகின்றன. சோழர் காலத்தைச் சேர்ந்த 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சிணாமூர்த்தி சிற்பத்தை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். இப்பகுதியில் புதைந்துள்ள வரலாற்று தடயங்களை வெளியே கொண்டு வருவதற்கு கிராம மக்கள் முனைப்புக் காட்ட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ராமர், சீதை சிலை செய்ய நேபாளத்தில் இருந்து உ.பி.க்கு சாளக்கிராம கற்கள் வருகை!