விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் மாதமிருமுறை, சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை நேரில் அழைத்து அவர்களின் பணியை பாராட்டி, சான்றிதழ், வெகுமதி வழங்குவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் கடந்த இரு வாரங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டறிதல், வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல், கஞ்சா, உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தல் போன்ற செயல்களில் சிறப்பான முறையில் பணியாற்றிய விழுப்புரம் தாலுகா காவல் நிலையம், கண்டமங்கலம், திருக்கோவிலூர், பகண்டை, திருவெண்ணை நல்லூர், திருநாவலூர், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை, எடைக்கல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 30 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மேலும், ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, ஏடிஎம் இயந்திரத்தில் வந்த ரூ.10 ஆயிரம் பணத்தை செஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரையும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கௌரவித்தார்.