வேலூர்: பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி கொத்தமாரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அசோகன் (44), அவருடைய மகன் ஆகாஷ்(23). இவர்கள் நேற்றிரவு (ஜன.1) தங்களது கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் அருகே பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கியில் அதிக சப்தத்தை வைத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இவர்களது உறவினரான மலர் (36) என்பவர் ஒலிபெருக்கி சப்தத்தை குறைக்கக் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த தந்தை, மகன் இருவரும் மலர், அவரது மகள் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. அப்போது இதனைக் கண்ட மலரின் மகன் வினித் (23) இருதரப்புக்குமிடையே சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த ஆகாஷ், அசோகன் ஆகிய இருவரும் கூர்மையான ஆயுதத்தால் வினித்தின் மார்புப்பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த வினித் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக வினித்தை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே வினித் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வினித்தின் தாயார் மலரளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மேல்பட்டி காவல்நிலையத்தினர், அசோகன், ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்பு இருவரும் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: காதலை காட்டிக் கொடுத்த அக்கா... போட்டுத்தள்ளிய தங்கை