வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காதர்(21). இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி, ஆறு மாதத்தில் கை குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், இன்று (ஜூன் 2) மாலை காதர் தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கியுள்ள நீரில் குளிக்கச் சென்றார்.
குவாரியில் குளித்துக் கொண்டிருந்தபோது, காதருக்கு நீச்சல் சரிவர தெரியாததால் எதிர்பாராத விதமாக 200 அடிக்கும் மேல் கொண்ட குவாரி நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியூர் காவல் துறையினர், வேலூர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் காதரின் சடலத்தை தேடினர்.
மாலை 6.00 மணி வரை தேடியும் உடல் கிடைக்காததால் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரின் உதவியை நாடினர். இதையடுத்து, காதரின் உடல் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் நாளை (ஜூன் 3) தேடப்பட உள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து அரியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.