திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மணி (28). இவர் சென்னையில் பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார். இவர் நித்யா (25) என்னும் பெண்ணை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
இருவருக்கும் 13 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் கணவன்-மனைவிக்குள் நாளடைவில் வரதட்சணை பிரச்னை ஏற்பட்டது. பின்னர் சென்னையில் இருந்த மணிக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதால் அவர் வீட்டுக்கு வராமல் சென்னையிலேயே தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நித்யா கைக்குழந்தையோடு அவரது மாமியாருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அடிக்கடி மாமியார் மருமகளிடையே சண்டை அரங்கேறி வந்துள்ளது. இதனால் மனமுடைந்த நித்யா இன்று காலை வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் கைக்குழந்தை முன் தூக்கு மாட்டி தொங்கியுள்ளார்.
இதையடுத்து குழந்தை அழும் சத்தம் கேட்டு நித்யா தூக்கில் தொங்கியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ந்து போய் நாட்றம்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் நாட்றம்பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை முன்பாக தாய் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இலங்கை தமிழர்களின் சமநீதிக்கு அரசு வழிவகை செய்யுமென நம்புகிறேன்- பிரதமர் மோடி!